Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Thursday, March 25, 2010

திரு.லோகநாதன் - கோவையில் மரம் நடும் பேருந்து நடத்துனர்

திரு, எஸ். பாபு எழுதிய இக்கட்டுரை தன்னம்பிக்கை இணையதளத்தின் வழியாக எடுக்கப்பட்ட்டுள்ளது.

செய்தி நாள்: அக்டோபர்-2008

இரண்டு வாரங்களுக்கு முன்பு, கோவையில் “நெருஞ்சி இலக்கிய முற்றம்” என்ற அமைப்பின் சார்பாக ஒரு பாராட்டு விழா நடந்தது. பாராட்டப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் பேருந்து நடத்துனர் திரு.லோகநாதன். மற்றவர் தோழர் அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்த திரு. சாந்தகுமார்.

இருவரும் சாதனைகளின் இரு வேறு சிகரங்கள். தனியொரு மனிதராக தமிழ்நாட்டில் இதுவரை முப்பதாயிரம் மரங்களுக்கும் மேலாக நட்டு சாதனை புரிந்திருக்கிறார் லோகநாதன். அவரது முயற்சியைப் பாராட்டி ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. ஊரையே பசுமையாக்குகிறோம் பேர்வழி என்று வெறும் விளம்பரத்திற்காக மரங்களை நட்டு அதை புகைப்படம் எடுத்து செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்திக் கொண்டு, பிசினஸ் நோக்கத்தில் செயல்படும் எந்த ஒரு அமைப்பையும் சாராதவர் இவர் என்பது ஆச்சரியமான தகவல். தன்னுடைய சமூகப்பணிக்கு இவர் உதவி நாடுவது, பள்ளிக்கூட குழந்தைகளிடம் மட்டும் தான். பள்ளிக் கூடங்கள் தோறும் சென்று இயற்கை மற்றும் மரங்கள் சம்பந்தமான காட்சி (Slide show) நடத்துகிறார். பின்னர் ஆர்வமுள்ள மாணவ-மாணவியரைக் கொண்டு அந்தந்தப் பகுதிகளில் மரங்களை நடுகிறார்.

இன்றைய காலகட்டத்தில் “மரம் நடுவது” என்பது பேஷனாகிவிட்டது. மரம் நடு விழாக்களைப் பற்றி நாள்தோறும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஆனால் அந்த மரங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனவா என்று கேட்டால், இல்லை என்பது தான் உண்மை. ஆனால் லோகநாதன் சற்று வித்தியாசமானவர். எந்த இடத்தில் மரம் நட்டால் அது வளரும் என்பதை முதலில் ஆராய்ந்து இடங்களை தேர்வு செய்கிறார். பின்னர் பள்ளிகூடக் குழந்தைகளைக் கொண்டு அங்கே மரங்களை நட்டு, அந்த மரங்களுக்கு “ப்ரியா புளியமரம்”, “விக்னேஷ் வேப்பமரம்” என்று குழந்தைகளின் பெயரை சூட்டுகிறார். இதனால் இது தங்களுடைய மரம் என்கிற உணர்வும் பொறுப்பும் குழந்தைகளுக்கு வந்து விடுவதால், அவர்களே மரங்களுக்கு பாதுகாப்பு அளித்து, நீருற்றி பராமரிக்கிறார்கள்.

Reference:
தன்னம்பிக்கை இதழ் - ஒரு பாதசாரியின் பயணக்குறிப்பு


Saturday, March 20, 2010

குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டம்

செய்தி நாள்: 11-நவம்பர்-2009

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இயற்கையின் கொடையான மரங்களை வளர்க்கவும், புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதிலும் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறார்.

   இதன்படி மாவட்டம் முழுவதிலும் ஒரே நேரத்தில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் பள்ளி மாணவ, மாணவியர், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொது மக்கள் ஆகியோர் பங்கேற்புடன் அண்மையில் செயல்படுத்தப்பட்டது.

  இதற்கான வரவேற்பு நல்ல முறையில் இருந்து வருவதைத் தொடர்ந்தும், ஒவ்வொரு மனிதரிடையேயும் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒட்டி மரம் வளர்ப்பதைத் தொடர் இயக்கமாக செயலாக்கும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் புதிய திட்டத்தைத் தொடங்க உள்ளார்.

   இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மாதம்தோறும்  1500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.

  இந்தக் குழந்தைகளின் பெற்றோர்களிடம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி தங்களது குழந்தைகளின் பெயரில் மரம் வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

   இந்தத் திட்டம் முதல் கட்டமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

 வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் மரக்கன்றுகளைக் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக  ஆட்சியர் மா.வள்ளலார் தெரிவித்துள்ளார்.

Reference
தினமணி

காடு வளர்ப்பு மக்கள் இயக்கமாக வேண்டும்

செய்தி நாள்: 30-டிசம்பர்-2009

காடு வளர்ப்பை மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும் என்று காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் சோம.ராமசாமி பேசினார்.

தமிழ்நாடு வனத் துறை வனவியல் விரிவாக்கத் துறை சார்பில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை மரம் வளர்க்கும் தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்குத் தலைமை வகித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் சோம.ராமசாமி பேசியதாவது:

பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.

காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும்.

காடு வளர்ப்பு என்பதை ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும். தமிழகத்தின் எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை, அமிலத் தன்மை, வளம் ஆகியவை குறித்த ஆய்வு அறிக்கையை காந்திகிராம பல்கலைக்கழகம் வழங்க முடியும். எந்த மரங்களை நட்டால் வேகமாக வளரும் என்பது குறித்த ஆய்வுக் கட்டுரையையும் தர முடியும் என்றார் துணைவேந்தர் சோம.ராமசாமி.

சென்னை வனவிரிவாக்கத் தலைமை வன பாதுகாவலர் வை.இருளாண்டி பேசுகையில், இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே ஆளுக்கொரு மரம் நடவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக மதுரை வனவிரிவாக்க அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார். திருச்சி வனவிரிவாக்க அலுவலர் பா.சொர்ணப்பன் நன்றி கூறினார்.

வனவிரிவாக்கத்தில் நற்பணிபுரிந்து இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷ மித்ரா விருது பெற்ற வனத்துறை அலுவலர் உ.வீரக்குமார் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்.

Reference:
தினமணி

புறம்போக்கு நிலங்களில் மரம் வளர்ப்பு: அரசுக்கு கோரிக்கை

செய்தி நாள்: 4-பிப்ரவரி-2010
 
காகித உற்பத்தித்தொழில் வளர்ச்சி பெற,​​ புறம்போக்கு நிலங்களில் மரங்களை வளர்க்க அரசு நீண்ட கால குத்தகை அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய காகிதக் கூழ் மற்றும் காகித தொழில்நுட்ப சங்கத்தின் ​(ஐ.பி.பி.டி.ஏ.)​ தலைவர் என்.பி.​ பிரபு மற்றும் சேஷசாயி பேப்பர் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் கே.எஸ்.​ காசி விஸ்வநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காகித உற்பத்தியில் 15வது இடத்தில் உள்ள இந்தியா விரைவில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தைப் பெறும்.​ இந்திய காகித ஆலைகளின் உற்பத்தித் திறன் 93 லட்சம் டன்.​ இதில் 89 லட்சம் டன் அளவு காகிதம் உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது.

நாட்டில் ஆண்டுதோறும் காகித விற்பனை அளவு ரூ.​ 25 ஆயிரம் கோடி ஆகும்.​ இந்தத் தொழில் மூலம் 5 லட்சம் மக்களுக்கு நேரடியாகவும்,​​ 11 லட்சம் மக்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

காகிதத்தின் தேவை அதிகரித்து வருவதால்,​​ அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த காகித உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கும்.​ இதற்காக ரூ.​ 10 ஆயிரம் கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது.​ செய்தித்தாள் காகிதத்தில் 60 சதவீதம் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உள்ளது.

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி:​​ காகிதத் தொழிலுக்கு இப்போது உள்ள நெருக்கடியான பிரச்னை நார் நிறைந்த கச்சாப் பொருள்கள் பற்றாக்குறை ஆகும்.​ இதற்காக புறம்போக்கு நிலங்களில் மரங்களை வளர்க்க காகித ஆலைகளுக்கு நீண்டகால ஒப்பந்த அனுமதியை அரசு வழங்க வேண்டும்.​ இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.​ காகிதத் தொழில் வளர்ச்சி பெற தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

இன்று கருத்தரங்கு:​​ காகிதத் தொழில் எதிர்நோக்க உள்ள பல்வேறு சவால்கள் குறித்த தேசிய கருத்தரங்கு சென்னை தியாகராயநகரில் உள்ள ரெசிடென்சி டவர் ஹோட்டலில் 5,​ 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.இந்தக் கருத்தரங்கில் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தனர்.

Reference:
தினமணி

நாமக்கல் ஆட்சியர் சகாயம் - மரம் நடும் சேவை

செய்தி நாள்: 25-நவம்பர்-2010

மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும்.
-நாமக்கல் ஆட்சியர் சகாயம்.

Reference:
ஆனந்த விகடன்

பசுமை போர்வை திட்டம்

நாள்: 20-மார்ச்-2010

புவி வெப்பமயமாதலை தடுக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மாவட்டம் தோறும் தேர்வு செய்யப் பட்ட நான்கு பள்ளிகளில், 'பசுமை போர்வை' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.புவி வெப்பமயம்: தொழிற்சாலை கள், வாகன பெருக்கம் உட்பட பல்வேறு விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் புகை காரணமாக புவி வெப்பமயமாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க சுற்றுச்சூழல் துறை சார்பில் இயற்கை சார்ந்த பொருள்கள் அழியாமலும், புதுப்பிக்கவல்ல எரிசக்திகளை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது.புதிய திட்டம்: புவி வெப்ப மயமாதலை தடுக்கவும், கரியமிலவாயு தாக்கத்தை குறைக்கும் விதமாகவும் பள்ளிகளில், 'பசுமை போர்வை' என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இரண்டு உயர்நிலை, இரண்டு மேல்நிலைப்பள்ளிகள் தேர்வுசெய்யப்பட உள்ளன. தமிழகத்தில், சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்டத்திற்கு தலா ஒரு லட்சம் வீதம், 31 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதியில் பள்ளி வளாகத்தில் தேவையான மரக்கன்று களை நட்டு பாதுகாத்து வளர்க்கப்பட உள்ளன.இந்த கல்வியாண்டிலிருந்து ஆண்டுதோறும், ஒவ்வொரு மாவட்டத் திலும், நான்கு பள்ளிகளை தேர்வு செய்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான நிதி பயன்படுத்தும் விதம், திட்ட அறிக்கையை பள்ளிகளிடம் இருந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள் ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

Refernces
தினமலர்