Saturday, March 20, 2010

புறம்போக்கு நிலங்களில் மரம் வளர்ப்பு: அரசுக்கு கோரிக்கை

செய்தி நாள்: 4-பிப்ரவரி-2010
 
காகித உற்பத்தித்தொழில் வளர்ச்சி பெற,​​ புறம்போக்கு நிலங்களில் மரங்களை வளர்க்க அரசு நீண்ட கால குத்தகை அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய காகிதக் கூழ் மற்றும் காகித தொழில்நுட்ப சங்கத்தின் ​(ஐ.பி.பி.டி.ஏ.)​ தலைவர் என்.பி.​ பிரபு மற்றும் சேஷசாயி பேப்பர் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் கே.எஸ்.​ காசி விஸ்வநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காகித உற்பத்தியில் 15வது இடத்தில் உள்ள இந்தியா விரைவில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தைப் பெறும்.​ இந்திய காகித ஆலைகளின் உற்பத்தித் திறன் 93 லட்சம் டன்.​ இதில் 89 லட்சம் டன் அளவு காகிதம் உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது.

நாட்டில் ஆண்டுதோறும் காகித விற்பனை அளவு ரூ.​ 25 ஆயிரம் கோடி ஆகும்.​ இந்தத் தொழில் மூலம் 5 லட்சம் மக்களுக்கு நேரடியாகவும்,​​ 11 லட்சம் மக்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

காகிதத்தின் தேவை அதிகரித்து வருவதால்,​​ அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த காகித உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கும்.​ இதற்காக ரூ.​ 10 ஆயிரம் கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது.​ செய்தித்தாள் காகிதத்தில் 60 சதவீதம் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உள்ளது.

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி:​​ காகிதத் தொழிலுக்கு இப்போது உள்ள நெருக்கடியான பிரச்னை நார் நிறைந்த கச்சாப் பொருள்கள் பற்றாக்குறை ஆகும்.​ இதற்காக புறம்போக்கு நிலங்களில் மரங்களை வளர்க்க காகித ஆலைகளுக்கு நீண்டகால ஒப்பந்த அனுமதியை அரசு வழங்க வேண்டும்.​ இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.​ காகிதத் தொழில் வளர்ச்சி பெற தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

இன்று கருத்தரங்கு:​​ காகிதத் தொழில் எதிர்நோக்க உள்ள பல்வேறு சவால்கள் குறித்த தேசிய கருத்தரங்கு சென்னை தியாகராயநகரில் உள்ள ரெசிடென்சி டவர் ஹோட்டலில் 5,​ 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.இந்தக் கருத்தரங்கில் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தனர்.

Reference:
தினமணி

0 comments:

Post a Comment