செய்தி நாள்: 11-நவம்பர்-2009
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டம்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இயற்கையின் கொடையான மரங்களை வளர்க்கவும், புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதிலும் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறார்.
இதன்படி மாவட்டம் முழுவதிலும் ஒரே நேரத்தில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் பள்ளி மாணவ, மாணவியர், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொது மக்கள் ஆகியோர் பங்கேற்புடன் அண்மையில் செயல்படுத்தப்பட்டது.
இதற்கான வரவேற்பு நல்ல முறையில் இருந்து வருவதைத் தொடர்ந்தும், ஒவ்வொரு மனிதரிடையேயும் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒட்டி மரம் வளர்ப்பதைத் தொடர் இயக்கமாக செயலாக்கும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் புதிய திட்டத்தைத் தொடங்க உள்ளார்.
இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மாதம்தோறும் 1500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.
இந்தக் குழந்தைகளின் பெற்றோர்களிடம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி தங்களது குழந்தைகளின் பெயரில் மரம் வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் முதல் கட்டமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் மரக்கன்றுகளைக் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆட்சியர் மா.வள்ளலார் தெரிவித்துள்ளார்.
Reference
தினமணி
0 comments:
Post a Comment